கும்பகோணம் மகாமக குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேங்க ஆழ்குழாய் கிணறு
தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்குவதற்காக, 19.75 லட்சம் ரூபாயில், இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளம் கோடை காலங்களில் வறண்டு, தண்ணீர் இல்லாமல் காணப்படுகிறது. மகாமக குளத்தில் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும் என, தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, மயிலாடுதுறை, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 19.75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியின் மூலம், மகாமக குளத்துக்கு தண்ணீர் வரும் அரசலாற்றின் இடது கரையில், இரு இடங்களில், 300 அடி ஆழத்துக்கு ஆழ்குழாய் அமைக்கப்பட்டது.இதில், 30 கே.வி., திறன் உள்ள மோட்டார் பொருத்தி, ஒரு மணி நேரத்தில், 1.44 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி, அதைகுழாய் மூலம், 300 மீட்டர் தொலைவில் உள்ள மகாமக குளத்துக்குள் விட ஏற்பாடு செய்யப்பட்டது. மயிலாடுதுறை, எம்.பி., பாரதிமோகன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், இந்த மோட்டாரை, நேற்று வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு இயக்கி வைத்து, மகாமக குளத்தில் மலர் தூவினார்.