மயானக் கொள்ளை விழா சிறப்பு யாகத்துடன் துவக்கம்
தர்மபுரி: குமாரசாமிப்பேட்டை, அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜை நடந்தது.
தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை மயானத்தில் நடக்கவுள்ள மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, நேற்று மஹா கணபதி, சுப்பிரமணியர் மற்றும் அம்பாள் ஹோமம், கொடியேற்றம், அம்மன் வீதி உலா நடந்தது. இன்று காலை, 5:00 மணிக்கு, சக்தி கரக ஊர்வலம், 9:00 மணிக்கு பூமிதி விழா; நாளை மறுநாள் காலை, 9:00 மணிக்கு, பால்குடம் எடுத்தல், இரவு, 9:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம்; வரும், 6 நள்ளிரவு, 1:00 மணிக்கு, முகவெட்டு ஊர்வலம், காலை, 9:30 மணிக்கு அலகு குத்துதல்; காலை, 11:00 மணிக்கு, மயானக்கொள்ளை பெருவிழா நடக்கிறது. பக்தர்கள் பறவை காவடி, விமான காவடி ஆகியவற்றை சுமந்து ஊர்வலம் வருவர். 7ல், பல்லக்கு உற்சவம், 8ல், கும்பபூஜை மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது.
* கிருஷ்ணகிரி மாவட்டம், தாம்சன்பேட்டையில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில் மயான சூறைத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 5ல் மஹா சிவராத்திரி, 6ல் அலகு குத்துதல், மதியம் அம்மன் மயான சூறைக்கு புறப்படுதல் நடக்கிறது. 7ல் விடாக்கஞ்சி ஊற்றுதல், 8 காலை தீமிதி விழா, 9ல் அம்மன் பல்லக்கு ஊர்வலம், 10ல் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 11ல் மஞ்சள் நீராட்டு விழா, அம்மையப்பன் நகர்வலம், 13ல் கும்ப பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதே போல், காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெரு, அங்காளம்மன் கோவில் மயான சூறைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.