உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரயாக்ராஜில் கும்பமேளா நிறைவு

பிரயாக்ராஜில் கும்பமேளா நிறைவு

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடந்து வரும், கும்பமேளா, மகா சிவராத்திரியான இன்றுடன்(மார்ச் 4) நிறைவடைகிறது. இதையடுத்து, இங்குள்ள திரிவேணி சங்கமத்தில், 1 கோடி பேர், இன்று புனித நீராடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில், அலகாபாத் என ஏற்கனவே அழைக்கப்பட்ட, பிரயாக்ராஜில், கும்பமேளா நடந்து வருகிறது. ஜனவரி, 15ல், மகர சங்கராந்தியில் துவங்கிய இந்த கும்பமேளா, மகா சிவராத்திரியான, இன்றுடன் முடிகிறது. மொத்தம், 55 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளாவில், இதுவரை, 22 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.

கங்கை, யமுனை மற்றும் இதிகாசங்களில் குறிப்பிடப்படுள்ள சரஸ்வதி என, மூன்று நதிகள் இணையும், பிரயாக்ராஜில், 2013ல் கும்பமேளா நடந்தது. அடுத்த கும்பமேளா, 2025ல் நடக்க உள்ளது.உலகிலேயே, அதிக அளவில் மக்கள் கூடும் மிக பிரமாண்ட மத நிகழ்வாக, கும்பமேளா கருதப்படுகிறது. கடந்த, 2013ல் நடந்த கும்பமேளாவில், 12 கோடி பேர் பங்கேற்றது சாதனையாகும். இந்த நிலையில், இந்தாண்டு நடக்கும் கும்பமேளாவில், இதுவரை, 22 கோடி பேர் பங்கேற்று, புனித நீராடியுள்ளனர். மகா சிவராத்திரியான இன்றுடன் இந்த ஆண்டு கும்பமேளா நிறைவடைய உள்ளது. இதில், 1 கோடி பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை, மாநில அரசு செய்துள்ளது .பக்தர்கள் அதிக அளவில் குவிவர் என்பதால், 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அண்டை நாடான பாகிஸ்தானுடனான உறவு மோசமடைந்துள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில், துணை ராணுவப் படையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரயாக்ராஜ் நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக, கூடுதல் ரயில்கள், பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !