காஞ்சி கோவில்களில் சிவராத்திரி விழா
காஞ்சிபுரம்: மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில், 83வது திரிமூர்த்தி சிவஜெயந்தி விழா இன்று, காஞ்சிபுரத்தில் நடக்கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில், ஆண்டு தோறும், சிவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு, கலெக்டர் அலுவலகம் பின்புறம், வடிவேல் நகரில் உள்ள, பிரம்ம குமாரிகள் மையத்தில், இன்று காலை, சிவ பரமாத்மாவின் கொடியேற்று விழா நடக்கிறது. தொடர்ந்து, அங்கிருந்து ஏகாம்பரநாதர் கோவில் வரை, அமைதி ஊர்வலம் நடக்கிறது. இக்கோவிலில், மாலை, காசி விஸ்வநாதர் தரிசனம், ராஜயோக தியான பட விளக்கம் கண்காட்சி, திருக்கைலாய மலையின் தத்ரூப காட்சி, சிவஜெயந்தி விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளியில் உள்ள சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை வீரபத்ரசுவாமி கோவில், தாராட்சி பரதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில், மெய்யூர் மெய்கண்டேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா, விமரிசையாக நடைபெறுகிறது.
ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் அத்திமாஞ்சேரிபேட்டை பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், இவ்விழா கொண்டாடப்படவுள்ளது.
புதுகும்மிடிப்பூண்டி பாலீஸ்வரர், சந்திரசேகரர் கோவில், அரியதுரை வரமூர்த்தீஸ்வரர், ரெட்டம்பேடு வில்நாதேஸ்வரர் ஆகிய கோவில்களில் மஹா சிவராத்திரி விழா நடைபெறுகிறது., நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளன.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொம்மி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழா, இன்று நடக்கிறது.