உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரக்குடி கோயிலில் அற்புதம்

வீரக்குடி கோயிலில் அற்புதம்

நரிக்குடி: மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு என்பது மட்டும் உண்மை. அது எப்படி இருக்கிறது, எந்த வடிவத்தில் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அதிசயங்கள் நடக்கும் போதுதான் நம்பப்படுகிறது. சமுதாயத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்கூட  கஷ்டத்தில்  கடவுளை நினைக்காமல் இருக்க முடியாது.

ஒரு மனிதனுக்கு என்னதான் சொத்து, சுகம் இருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லையென்றால் அந்த குடும்பமே நிலை குலைந்து போகும். அதற்காக மருத்துவ முறைகளை நாடிப்போவது எதார்த்தம். இருந்தாலும் அதீத நம்பிக்கை உடையவர்கள் கடவுளிடம் முறையிட்டு வேண்டுவது இயல்பு. அப்படி குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்  வீரக்குடி முருகைய்யனாரிடம் வேண்டினால்   சுவாமி  உத்தரவுப்படி சொன்ன வாக்கு பலிக்கும், தீராத வியாதி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மகாசிவராத்திரி அன்று   பல்வேறு ஊர்களிலிருந்து நேர்த்திக் கடன் செலுத்த  பக்தர்கள்  இங்கு குவிகின்றனர்.

நெற்றியில் ஆயுதம்: நரிக்குடியிலிருந்து  4 கி.மீ., தொலைவில் வீரக்குடி கிராமம் உள்ளது.  600 ஆண்டுகளுக்கு முன் யாதவ குலத்தை சேர்ந்த ஒருவர் நரிக்குடிக்கு பசும்பால் விற்க வரும்போது அந்த ஊர் கண்மாய்கரை வழியாக தினமும் செல்வார்.  அப்படி செல்லும் போதெல்லாம் ஒரு இடத்தில் வள்ளிக்கிழங்கு இடறிவிட்டு  பால் கொட்டுவது வழக்கமாக இருந்தது.  ஒரு நாள் வேட்டைக்கு சென்ற இருவரிடம்  இச்சம்பவத்தைக் கூற  அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களால் அந்த இடத்தை தோண்டினர். அப்போது வெளியேறிய சுயம்பு  முருகனாக காட்சி அளித்தார். முருகனின் நெற்றியில் ஆயுதம் பட்டதில் ரத்தம் தெரித்து 500 மீட்டர் துாரத்தில் ஒரு பாறையின் மீது விழுந்தது. இதனாலே வீரத்தின் அடையாளமாக கருதப்பட்டு  அந்த ஊருக்கு  வீரக்குடி எனப் பெயர் வந்தது. பீறிட்டு வந்த  ரத்தத்தை  வியாபாரி ஒருவர் கொண்டு வந்த  எண்ணெய்யை ஊற்றி நிறுத்தினர்.

இளமையான முதியவர்கள் சுவாமியை கண்ட மகிழ்ச்சியில் பால்காரர் தினமும் பாலும், மற்றவர்கள் பூஜையும் செய்து வந்தனர். அவ்வாறு செய்யும் போது   ஒரு முறை பூஜை பொருட்களை எச்சில்படுத்தினர். பெரியவர்கள் இருவர் பூஜை செய்வார்கள் என சுவாமி அருள்  கூற  மதுரை தெப்பக்குளம் அருகே வசித்த வயதான  கணவன், மனைவி கனவில்  வந்த சுவாமி பூஜை செய்ய  கூற  இருவரும்   வந்தனர். அப்போது கண்மாயில்  குளித்த போது  இருவரும் இளமை பருவத்தை அடைந்தனர். ஆச்சரியமடைந்த இருவரும் கடைசி வரை  சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.  சுயம்புவாக வந்ததால் ஈஸ்வரன் என்றும், கரை மேல் இருந்ததால் கரைமுருகஅய்யனார் என்றும் வழிப்பட்டு வந்ததோடு, தழிழகத்தில் எங்குமே இல்லாத  மயில், நந்தி, யானை வாகனங்கள் ஒரே இடத்தில் வைத்து வழிபட்டு வருவது கூடுதல் சிறப்பு. தகவலுக்கு  94420 33361.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !