உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி

மதுரை:சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதை காண ஏராளமான பக்தர்கள் திரள்வதால் அடிப்படை வசதிகளை செய்வது குறித்து மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் நேற்று 15 ல், ஆய்வு செய்தார்.

அழகர்கோவிலிலிருந்து புறப்படும் கள்ளழகர் வழிநெடுகிலும் பல்வேறு கோயில்கள், மண்டபங்களில் எழுந்தருள்கிறார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு
கள்ளழகரை தரிசிப்பர்.கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண முதல்நாள் இரவு முதல் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிவர். பக்தர்களுக்கு தேவையான
குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கள்ளழகர் வரும் வழிகளை கமிஷனர் விசாகன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பக்தர்கள் வசதிக்காக மாநகராட்சி எல்லை துவங்கும் கடச்சனேந்தல் முதல் வண்டியூர் வரை 78 நடமாடும் கழிப்பறைகள், 58 இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகள் வைக்கப்படுகின்றன.

உடனுக்குடன் துப்பரவு பணிகளை மேற்கொள்ள 1,200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் தூய்மையை கடைபிடிக்க வலியுறுத்தும் 40 பேர் அடங்கிய பிரசார குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.சுகாதாரம் பேண 100 டன் பிளிச்சிங் பவுடர், 250 டன் சுண்ணாம்பு பொடி தயார் நிலையில் உள்ளன.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் தற்காலிக பாலம், விளக்குகள் அமைக்கும் பணி 44 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயில் நடக்கிறது. மீனாட்சி அம்மன் கோயிலில் நான்கு மாசி, சித்திரை, ஆவணி வீதிகளில் 32 நடமாடும் கழிப்பறைகள், 18 குடிநீர் தொட்டிகள், 59 இடங்களில் தற்காலிக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !