உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை புறப்பட்ட கள்ளழகர்: மூன்று மாவடியில் எதிர்சேவை

மதுரை புறப்பட்ட கள்ளழகர்: மூன்று மாவடியில் எதிர்சேவை

மதுரை, மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை விழாவை முன்னிட்டு தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் நாளை (ஏப்.,19) அதிகாலை 5:45 மணிக்கு மேல் 6:15 மணிக்குள் எழுந்தருள்கிறார். இதற்காக தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் அழகர்கோவிலில் இருந்து நேற்று மாலை 6:45 மணிக்கு புறப்பட்டார்.

மூன்று மாவடியில் இன்று (ஏப்.,18) காலை 6:00 மணிக்கு எதிர்சேவை நடக்கிறது.இவ்விழா கடந்த ஏப்.,15 ல் துவங்கியது. முக்கிய விழாவான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் கண் கொள்ளாக் காட்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் கூடுவர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய பின், ராமராயர் மண்டபத்தில் காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்களின், தண்ணீர் பீச்சும் வைபவம் நடக்கிறது.


எதிர்சேவை விழா: அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு வரும் வழியில் திருக்கண் மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருள்வார். அவரை வரவேற்கும் விதமாக பக்தர்கள் சர்க்கரை மற்றும் மாவிளக்கு தீபங்கள் ஏற்றி வழிபடுவர். மூன்று மாவடியில் இன்று (ஏப்.,18) காலை 6:00 மணிக்கு எதிர்சேவை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு மாநகராட்சி மைய மண்டபத்தில் வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் இரவு 9:30 மணிக்கு மேல் பெருமாள் திருமஞ்சனமாகி ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை சாற்றி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.வைகையில் அழகர்தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு நாளை அதிகாலை (ஏப்.,19) 2:30 மணிக்கு கருப்பண சுவாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரம் நிகழ்ச்சி நடக்கிறது. வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் அதிகாலை 5:45 மணிக்கு மேல் 6:15 மணிக்குள் எழுந்தருள்கிறார். ராமராயர் மண்டபத்தில் பகல் 12:00 மணிக்கு அங்கப்பிரதட்சணம் முடிந்து, வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு இரவு 11:00 மணிக்கு எழுந்தருள்கிறார். ஏற்பாடுகளை தக்கார் வி.ஆர். வெங்கடாஜலம், செயல் அலுவலர் செ.மாரிமுத்து செய்து வருகின்றனர்.


தவிர்க்கலாமே!: பக்தர்கள் சிலர் விரத ஐதீகத்தை மீறும் வகையில் செயற்கையான மற்றும் அதிக விசைத்திறன் கொண்ட மெஷினை தண்ணீர் பையில் பொருத்தி தண்ணீரில் திரவியங்கள், ரசாயனப் பொடிகளை கலந்து சுவாமி மீது பீய்ச்சி அடிப்பதால் சுவாமி, சுவாமி வாகனம், ஆபரணங்கள் மற்றும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். ரசாயன தண்ணீர் உடலில் விழுவதால் உடல் எரிச்சலால் ஒவ்வாமை ஏற்படுகிறது. இதுபோன்ற விதிமீறலில் பக்தர்கள் ஈடுபடக்கூடாது, என கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !