மாரியூரில் சிவபெருமான் படகில் சென்று வலைவீசும் நிகழ்ச்சி
சாயல்குடி : -ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சாயல்குடி அருகே மாரியூரில் பவளநிறவல்லி அம்மன் சமேத பூவேந்தியநாதர் கோயில் பழமையும், புரதான சிறப்பும் பெற்றது. ஏப்.,12ல் கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 10 நாட்களும் உற்ஸவர் வீதியுலா புறப்பாடு, விஷேச அபிஷேக ஆராதனைகள், ஆன்மிகச்சொற்பொழிவு நடந்தது.
நேற்று காலை 7:40 மணிக்கு கோயில் இருந்து உற்ஸவர்களின் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.கடற்கரை முன்பு சுவாமி, அம்பாளுக்கு விசஷேதீபாராதனை நடந்தது.மாரியூர் மன்னார் வளைகுடா கடலில் சிவபெருமான் வேடமணிந்து சென்ற குருக்கள் மற்றும் மீனவர் தலைவர் போல் வேடம் அணிந்த நபர் ஆகியோர்நாட்டுப்படகில் அமர்ந்து, வலை வீசி சுறாமீனை பிடிக்கும் திருவிளையாடற் புராண வலைவீசும் படலக்காட்சிகள் நடந்தது. புராணச்சிறப்பு மிக்க நிகழ்வை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள்கடற்கரையில் நின்று சிவ சிவ கோஷம் எழுப்பினர்.சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை 10:30 மணிக்கு பவளநிறவல்லியம்மன் சமேத பூவந்தியநாதர் உற்ஸவ மூர்த்திகளுக்கு திருக்கல்யண உற்ஸவம் நடந்தது.கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்களால் மங்கலநாண் அணிவிக்கும்நிகழ்ச்சி நடந்தது. மாலையில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா வந்தனர். மாலை 5:00 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டு, விழா நிறைவு பெற்றது. பக்தர்களுக்கு குளிர்பானம், அன்னதானம்,தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது.ராமநாதபுரம சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன்,செயல் அலுவலர் வைரவ சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதானக்கமிட்டியினர் செய்திருந்தனர்.