பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று குண்டம் விழா
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த குண்டம் இறங்குகின்றனர். கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் மிகவும் பழைமை வாய்ந்தது. இக்கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி அமாவாசையன்று இரவு 7.00 மணிக்கு மாமாங்கம் ஆற்றில் கொடி கம்பம் வைத்து பூஜை செய்யப்பட்டு, இரவு 11.00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு 7.30 மணிக்கு சக் விந்தையை மாமாங்கம் ஆற்றில் இருந்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், அம்மன் பூப்பல்லக்கில் வைத்து திருவீதி உலா நடந்தது. நேற்று காலை 7.00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். பின், காலை 11.00 மணிக்கு குண்டம் திறக்கப்பட்டது. இக்குண்டம் 58 அடி நீளமும், மூன்றேகால் அடி அகலமும், மூன்று அடி ஆழமும் கொண்டது. மாலை 7.00 மணிக்கு குண்டத்தில் பூ போடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, மாமாங்கம் ஆற்றிலிருந்து 200 பேர் பூவோடு எடுத்து வந்தனர். உடன் அம்மன் பூப்பல்லக்கில் அழைத்து வரப்பட்டது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு குண்டம் இறங்குவதற்கு பூச்செண்டு, கரகம் அழைத்து வர ஆற்றுக்கு சென்று, அங்கிருந்து, அம்மன் பூப்பல்லாக்கில் உடன் நேர்த்தி கடன் செலுத்தும் 150 பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக உடன் சென்றனர். பின், காலை 6.30 மணிக்கு ஆற்றில் இருந்து அம்மன் பூப்பல்லாக்கில் கரகம், சக்தி விந்தையை அழைத்து வந்து, குண்டம் இறங்கும் நிழ்ச்சி நடைபெறவுள்ளது.