உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்குளி முத்துமாரியம்மன் கோவில் பூச்செரிதல் கோலாகலம்

ஊத்துக்குளி முத்துமாரியம்மன் கோவில் பூச்செரிதல் கோலாகலம்

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே ஊத்துக்குளி முத்துமாரியம்மன் கோவில் பூச்செரிதல் விழா கோலாகலமாக தொடங்கியது. ஊத்துக்குளி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பூச்செரிதல் விழாவுடன் தொடங்கி நடப்பது வழக்கம். இந்த கோவில் திருவிழாவின் போது பாரிவேட்டை நடத்துவது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த, ஒரே பிரிவை சேர்ந்த முத்துச்சாமி, நல்லுச்சாமி ஆகிய இருதரப்புக்கும் பல வருடங்களாக கருத்து வேறுபாடு உண்டு. இதனால் ஒவ்வொரு வருடமும் திருவிழா நேரத்தில் இரு தரப்பினரையும் அழைத்து மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம். இதையும் மீறி திருவிழா நேரத்தில் இந்த இரு தரப்பும் மோதிக்கொள்ளும் சம்பவம் பலமுறை நடந்துள்ளது. இந்த திருவிழா என்றால், வருவாய் துறை மற்றும் போலீஸாருக்கு ஒவ்வொரு ஆண்டும் பெரும் தலைவலிதான். கடந்த மாதம் 27ம் தேதி மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாததால், நல்லுச்சாமி தரப்பினர் திருவிழா நடத்த தேவையில்லை என கூறிவிட்டனர். இதையேற்க மறுத்த முத்துச்சாமி தரப்பினர் கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டனர். இதனால் இந்தாண்டு திருவிழா நடக்குமா? என்பது கேள்வி குறியாக இருந்து வந்தது. ஊர் முக்கியஸ்தர்களின் தொடர் முயற்சியினால் கடந்த இரண்டாம் தேதி மீண்டும் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் பெரியசாமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் கலந்துகொண்டு, அமைதியாக திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுப்போம் என கூறியதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு முத்துமாரியம்மனுக்கு பூச்செரிதல் விழா நடந்தது.
இதில், ஊத்துக்குளி, வேம்பனூர், வெள்ளய கவுண்டம்பட்டி, செல்லம்பட்டி, வெள்ளை பிடிச்சம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டு, பூத்தட்டுக்களை ஏந்தி வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். துவங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுருளியாண்டி, வளநாடு போலீஸ் எஸ்.ஐ., ராஜு, எஸ்.எஸ்.ஐ., க்கள் கிருஷ்ணன், பெருமாள் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !