வேப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :2393 days ago
வேப்பூர் : வேப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வேப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடப்பது வழக்கம்.
நடப்பாண்டில் சித்திரை திருவிழா கடந்த 15ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.தொடர்ந்து தினசரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்தது. இரவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.நேற்று காலை 8:00 மணியளவில் பக்தர்கள் சக்தி கிரகம் மற்றும் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர்.பின்னர், மாலை 4:30 மணியளவில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்.