உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இல்லந்தோறும் திருக்குறள்

இல்லந்தோறும் திருக்குறள்

சின்னமனூர் : எந்தக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துக்களை முப்பாலில் அடக்கிய பெருமை திருவள்ளுவரை சாரும். தமிழ் மொழியின் அடையாளங்களுள் ஒன்றாகி போன
திருக்குறளில் தினமும் நாம் பின்பற்ற வேண்டிய அனைத்தையும் ஒவ்வொரு அதிகாரமாக பிரித்து வழங்கியுள்ளார்.

இதன் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ள இல்லந்தோறும் திருக்குறள் என்ற தலைப்பில் வீட்டின் முன்பகுதியில் தினமும் ஒவ்வொரு திருக்குறள், அதற்கான விளக்க உரையை எழுதி வைக்கிறார் சின்னமனூரை சேர்ந்த தமிழாசிரியர் முத்துக்குமார்.பணி நிமித்தமாக வெளியூர் சென்றால், அவரது மனைவி திருக்குறளை எழுதுகிறார். தமிழ் மீது கொண்ட பற்றால், தான் பார்த்த கிராம நிர்வாக அலுவலர் வேலையை துறந்து விட்டு, தமிழாசிரியராக எரசக்கநாயக்கனூர் அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

அவர் கூறுகையில், மாணவ பருவத்தில் திருக்குறளின் மீதான ஈர்ப்பால் ஒப்புவித்தல், குறள் விளக்க போட்டிகளில் பங்கேற்றேன். இதில் கிடைத்த வெற்றி கல்லூரி பருவத்தில் மதுரையில் நடந்த திருவள்ளுவர் மன்ற கூட்டங்களில் பங்கேற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

2008 முதல் 2012 வரை மதுரை மாவட்டம் பேரையூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினேன். அரசு விழாக்களில் அரசு நிர்வாகம் குறித்து திருவள்ளுவர் எழுதிய பொருள், குடி, நாடு அதிகாரங்கள் குறித்து பேசியது பலதரப்பினரின் பாராட்டை பெற்றது.தமிழ் மொழியின் சிறப்பை மாணவர்களுக்கு கற்பிக்க தமிழாசிரியரானேன். தற்போது, சின்னமனூர்
திருக்குறள் பண்பாட்டு இயக்கத்தில் இணைந்து மாதத்தின் முதல் ஞாயிறன்று திருக்குறள் தொடர் வகுப்பு நடத்தி வருகிறோம்.

இதற்காக வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த தமிழறிஞர்களை அழைத்து ஒவ்வொரு அதிகாரம் குறித்து பொருள் விளக்கங்கள் அளிக்க வைக்கிறோம். இந்த வகுப்பில் பங்கேற்கும்
மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக உள்ளது. திருக்குறள் வழிகாட்டுதலில் நடந்தால் வாழ்க்கை இனிமையாகும், என்றார்.இவருக்கு சபாஷ் கூற 88254 45080


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !