உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதிலமடைந்து வரும் சிதம்பரேஸ்வரர் கோயில் தெப்பம்

சிதிலமடைந்து வரும் சிதம்பரேஸ்வரர் கோயில் தெப்பம்

சாத்துார் : சாத்துார் சிதம்பரேஸ்வரர் கோயில் தெப்பம் நாளுக்கு நாள் சேதமடைந்து வருவது பக்தர்களுக்கு வேதனை தருகிறது. தெப்பத்தை முறையாக பராமரிக்க பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சாத்துார் சிதம்பரேஸ்வரர் கோயில் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயில் முன்புள்ள தெப்பம் எப்போது தண்ணீரால் நிரம்பியிருக்கும். தெப்பத்திற்கு இயற்கையாக இருந்த தண்ணீர் பாதைகள் எல்லாம் காலப்போக்கில் ஆக்கிரமிப்பாளர்களால் மூடப்பட்டதால் கோவில் தெப்பம் தற்போது வருடம் முழுவதும் வறண்டு போய் காணப்படுகிறது.

அப்பகுதி இளைஞர்கள் தெப்பத்தை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். தெப்பத்தின் சுற்றுச்சுவர்களில் அரச மரச்செடிகள் முளைத்து வருவதால் கற்கள் பெயர்ந்து விழும் நிலையுள்ளது. மேலும் மர்ம நபர்கள் தெப்பத்திற்கு அமைத்திருந்த இரும்புகேட்டை உடைத்துள்ளனர். இதனால் தெப்பத்திற்கான கேட் முறிந்த நிலையில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சாத்துார் பகுதி தொழில் அதிபர்கள், டாக்டர்கள் இணைந்து நிதி திரட்டி தெப்பத்தினை சீரமைத்து திருவிழா நடத்தினர். இதன் பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்காததாலும், தொடர்ந்து தெப்பத்தை பராமரிக்க தவறியதாலும் தற்போது தெப்பம் சேதமடைந்து வருகிறது. சிலர் தெப்பத்தை சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனை பார்க்கும் சிவ பக்தர்கள் மனம் வேதனைபடுகின்றனர். பாரம்பரியமிக்க பழமையான சிவன் கோயில் தெப்பத்தை புனரமைத்து மீண்டும் திருவிழாக்கள் நடத்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !