உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளை பூச்சிகளாக மாறும் தேள்கள்: அம்ரோஹா தர்காவில் அதிசயம்

பிள்ளை பூச்சிகளாக மாறும் தேள்கள்: அம்ரோஹா தர்காவில் அதிசயம்

அம்ரோஹா: உத்தர பிரதேச மாநிலம், அம்ரோஹாவில் உள்ள தர்காவில், எவ்வளவு விஷம் வாய்ந்த தேள்களாக இருந்தாலும், அவை, யாரையும் கடிக்காமல், பிள்ளை பூச்சிகள் போல் இருப்பது, அதிசயமாக உள்ளது. கொட்டினால் தேள்; இல்லாவிடில், பிள்ளை பூச்சி என, தமிழில் ஒரு பழமொழி உண்டு. பாம்புக்கு அடுத்தபடியாக, பலரும் பயப்படுவது, தேளுக்கு தான்.

உ.பி.,யில் உள்ள அம்ரோஹாவில், சையது ஷர்புதீன் ஷா விலாயட் தர்கா உள்ளது. சூபி ஞானி ஷா விலாயட்டின் சமாதியான, இந்த தர்கா வளாகத்தில், ஆயிரக்கணக்கான தேள்கள், ஊர்ந்து சென்றபடி உள்ளன. விஷத்தன்மை அதிலும், கொடிய விஷத்தன்மை உடைய தேள்கள் தான் அதிகம் உள்ளன. ஆனால், இந்த தேள்கள் யாரையும் கடிப்பதில்லை. இதற்கு, சூபி ஞானியின் அருள் தான் காரணம் என, மக்கள் நம்புகின்றனர். அம்ரோஹாவில், 13ம் நுாற்றாண்டில் வாழ்ந்த சூபி ஞானி, தான் வசிக்கும் இடத்தில், தேள்கள் யாரையும் கடிக்காது எனக் கூறினார். அதனால் தான் இன்று வரை, தர்கா வளாகத்தில, தேள்கள் யாரையும் கடிப்பதில்லை என, மக்கள் கூறுகின்றனர். கொடிய விஷமுள்ள எந்த தேளையும், இந்த தர்காவுக்கு எடுத்து வந்தால், அவை, யாரையும் கடிக்காது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது பற்றி தர்கா நிர்வாகி, அனிஸ் அகமது கூறியதாவது:தர்காவுக்கு அருகே, பச்சை நிற பெட்டியில், கொடிய விஷமுள்ள தேள்கள் வைக்கப்பட்டுள்ளன. தர்காவுக்கு வரும் பக்தர்கள், இந்த தேள்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லவும் அனுமதி உண்டு.ஆனால், அந்த தேளை எப்போது, தர்காவுக்கு மீண்டும் எடுத்து வருவோம் என்பதை, முதலிலேயே தெரிவிக்க வேண்டும். அந்த நாள் வரை, வீட்டிலேயே, தேளை வைத்திருக்கலாம். அது வரை தேள் யாரையும் கடிக்காது.

அடையாளம்: காலக்கெடு முடிந்து, தர்காவுக்கு திருப்பி எடுத்து வராவிட்டால், தேள்கள் கடிக்க துவங்கி விடும். தர்கா நிர்வாகியாக, 30 ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். இந்த, 30 ஆண்டுகளில், தேள் கடித்து விட்டதாக, ஒருவர் கூட தெரிவித்ததில்லை.அது மட்டுமின்றி, பல பகுதிகளில் காணாமல் போகும், குதிரைகள், கழுதைகள், இந்த தர்காவுக்கு வந்து விடும். அதன் உரிமையாளர், தர்காவுக்கு வந்து, அதன் அடையாளங்களை தெரிவித்து, திரும்பி அழைத்து செல்லும் நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடக்கின்றன. மேலும், தர்கா வளாகத்தில் இருக்கும் போது, குதிரைகளும், கழுதைகளும், கழிவுகளை வெளியேற்றாது. குதிரைகள் மற்றும் கழுதைகளையும், தேள்கள் கடித்தில்லை. அம்ரோஹா வருபவர்கள், இந்த அதிசயத்தை இப்போதும் பார்க்கலாம். தர்காவுக்கு வரும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, அனைவரும், தேள்களை தங்கள் கைகளில் வைத்தபடி, செல்பி எடுத்துக் கொள்வது, இப்போது வழக்கமாகிவிட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !