உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா நிறைவு
உடுமலை: உடுமலை, மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி, அம்மன் பூப்பல்லக்கு திருவீதி உலா நடந்தது.உடுமலை, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, ஏப்., 16ம் தேதி கம்பம் போடப்பட்டு, கொடியேற்றப்பட்டது. பின் பூவோடு நிகழ்ச்சி நடந்தது. நாள்தோறும், சிறப்பு அலங்காரத்துடன், யானை, ரிஷபம், காமதேனு, அன்னம், சிம்ம வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், கடந்த 25ம் தேதி கோலாகலமாய் நடந்தது. அடுத்து, மாரியம்மன் சூலத்தேவருடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையடுத்து, குதிரை வாகனத்தில், மாரியம்மன் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி மற்றும் வாணவேடிக்கை நடந்தது. கடந்த 26ம்தேதி கொடியிறக்கப்பட்டு, மகாபிேஷகம் நடந்தது. திருவிழா நிறைவுபெற்றதையொட்டி, அம்மன் நேற்றுமுன்தினம், சிறப்பு அலங்காரத்துடன் பூப்பல்லக்கில், பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, தங்கம்மாள் ஓடை பகுதிகளின் வழியாக திருவீதி உலா வந்தார். பக்தர்கள் வீதிகளில் திரண்டிருந்து, சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த அம்பாளை தரிசித்தனர்.