மாரியம்மன் பூச்சாட்டு விழா: பெண்கள் மாவிளக்கு வழிபாடு
திருப்பூர்: பிச்சம்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவில் சித்திரை பூச்சாட்டு விழாவில் நேற்று, மாவிளக்கு ஊர்வலமும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகளும் நடந்தன. பிச்சம்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவில் சித்திரை பூச்சாட்டு பொங்கல் விழா, கடந்த மாதம், 14ம் தேதி, வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.
பொரிமாற்றுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, தினமும் அபிஷேக பூஜை நடந்தது. 23ம் தேதி பூவோடு ஊர்வலமும், 24ல் 108 கலச சிறப்பு அபிஷேக பூஜையும், 25ம் தேதி 108 வலம்புரி சங்காபிஷேகமும், 26ல் பால்குட ஊர்வலமும், 28ல் லட்சார்ச்சனை நிகழ்ச்சிகளும் நடந்தன.அக்னி அபிஷேக பூஜைகள், 29ம் தேதி காலை நடந்தது. விநாயகர் அலங்காரம், அம்மன் அழைத்தல், படைக்கலம் எடுத்துவரும் நிகழ்ச்சிகளும், 30ம் தேதி சிறப்பு அபிஷேகமும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.மாரியம்மன் பொங்கல் விழா நேற்று நடந்தது. காலையில், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையை தொடர்ந்து, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று, மஞ்சள் நீர் விழாவும், நாளை வசந்த உற்சவ பூஜைகளும் நடக்கின்றன.