உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலையில் மழை பொழிய வேண்டி சிறப்பு யாகம்

சிவன்மலையில் மழை பொழிய வேண்டி சிறப்பு யாகம்

திருப்பூர் : காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் மழை வேண்டி நேற்று சிறப்பு யாகம் நடைபெற்றது.தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி, மாநிலம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள முக்கிய கோவில்களில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த, உத்தரவிடப்பட்டது. அவ்வகையில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் - ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்கள், காங்கயம் சிவன்மலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், கருவலுார் மாரியம்மன் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் உட்பட பல்வேறு கோவில்களில் இச்சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நேற்று காங்கயம் சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் காலை 10:00 மணிக்கு மழை வேண்டி சிறப்பு யாகம் துவங்கியது. சிவாச்சார்யார்கள் மூலவர் சன்னதி முன், யாக குண்டம் அமைத்து இதில், சாந்தி வருண ஜெப வேள்வி, நந்தியம்பெருமானுக்கு புனித நீர் ஊற்றி அபிேஷகம் நடைபெற்றது.சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய, மழைப் பதிகம் மற்றும் திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார மழைப்பதிகத்தை ஓதுவார்கள் பாராயணம் செய்தனர். தொடர்ந்து நாதஸ்வர மங்கள வாத்திய குழுவினர், அமிர்தவர்ஷினி, ஆனந்த பைரவி ராகம் இசைத்தனர். யாக பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கண்ணதாசன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !