பிரான்மலை திருக்கொடுங்குன்ற நாதருக்கு தாராபிஷேகம்
சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் மங்கைபாகர் தேனம்மை கோயிலில் அக்னி நட்சத்திரத்தையொட்டி தாராபிஷேகம் செய்யப்படுகிறது.
மூன்றடுக்குகளாக அமைந்துள்ள இக்கோயிலின் பாதாள தளத்தில் திருக்கொடுங்குன்ற நாதர் சன்னதி உள்ளது. இங்கு லிங்கத்திருமேனியாய் சுவாமியும், குயிலமுதநாயகியாக அம்பாளும் அருள்பாலிக்கிறார்கள். அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி திருக்கொடுங்குன்ற நாதருக்கு தாராபிஷேகம் செய்யப்படுகிறது. துளையிடப்பட்ட தாரா பாத்திரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு அருகம்புல் வழியாக சித்திரை 21 முதல் வைகாசி 14 வரை தொடர்ந்து இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்காக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து மழைவேண்டி சிறப்பு வருண ஜெபம், வருண யாகம் நடத்தப்பட்டது. இதற்காக சன்னதி முன்பாக உள்ள நந்தீஸ்வரரை சுற்றி தொட்டி கட்டப்பட்டு நந்தியின் கழுத்தளவுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. மழை வேண்டி சிறப்பு யாகம், வழிபாடு நடத்தப்பட்டது. இந்த பூஜைகளுக்கான ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதீனம் செய்திருந்தது.