மாசாணியம்மன் கோவிலில் பாதுகாப்பு: பலப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை
ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத் துவதற்காக, பல்வேறு துறை அதிகாரிகளுக்கு கூட்டம் நடத்தப்பட்டு, கோவிலில் ஆய்வு செய்யப்பட்டது.இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்பில், நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.
இதையடுத்து, நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள், ரயில்வே ஸ்டேஷன், பெரிய ஓட்டல்கள், முக்கிய இடங்களில், போலீசார் சோதனை செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கோவில்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், சென்னை உளவுத்துறை பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. இதில், வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன், ஆனைமலை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், எஸ்.ஐ., கருப்பசாமி பாண்டியன், கோவில் உதவி ஆணையாளர் ஆனந்த் மற்றும் வருவாய்த்துறை, பேரூராட்சி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆய்வுக்கூட்டம் முடிந்ததும், கோவில் வளாகத்தில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன் பேசுகையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார், தீயணைப்புத்துறை, கோவில் நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும்.விசேஷ தினங்களில் மக்களுக்கு ஆபத்து காலத்தில் முதலுதவி வழங்கி, சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீயணைப்பு கருவிகள் முறையாக பராமரிக்க வேண்டும், என்றார்.
உளவுத்துறை பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சேகர் கூறியதாவது:கூட்டம் அதிகம் இருக்கும் பெரிய கோவில்களிலும், விசேஷ தினங்களில் மட்டுமே கூட்டம் வரும் கோவில்களிலும் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மாசாணியம்மன் கோவிலுக்கு, ஏழு நுழைவு வாயில்கள் உள்ளன.ஆபத்து காலத்தில் மக்கள் வெளியேற, குறிப்பிட்ட நுழைவு வாயில்களை தேர்வு செய்து அவற்றில் அவசர கால வழி என்பதை தெரிவிக்கும் வகையில், அறிவிப்பு பலகைகள் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பணியாளர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.
கோவில் நுழைவுவாயிலில், விமான நிலையத்தில் இருப்பது போல டி.எப்.எம்.டி., என்ற, மெட்டல் டிடெக்டர் அமைக்கவும், பக்தர்கள் கோவிலுக்குள் கொண்டு வரும் பொருட்களை சோதனையிட ஸ்கேனர் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு, தெரிவித்தார்.