உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் தவிப்பு: அடிப்படை வசதிகள் இல்லை

ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் தவிப்பு: அடிப்படை வசதிகள் இல்லை

ராமநாதபுரம்: திருப்புல்லாணி அருகே ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாததால் பக்தர்கள் தவிக்கின்றனர். திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் கோயில் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு ஆதி ஜெகநாத பெருமாள், தர்பசயன ராமர் சன்னதிகள் உள்ளது. இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

சேதுக்கரை சேது பந்தன ஆஞ்சநேயர் கோயிலில் தர்ப்பணம் செய்ய அதிகமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கடலில் புனித நீராடிவிட்டு, திரும்பு வழியில் உள்ள ஆதிஜெகநாத பெருமாள் கோயில் பகுதியில் அமர்ந்து உணவு உண்டு திரும்புவது வழக்கம்.ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் உணவு அருந்துவதற்கு என தனியாக ஷெட் ஏதும் அமைத்து தரப்படவில்லை. பக்தர்கள் நடு ரோட்டில் அமர்ந்து உணவருந்துகின்றனர். உணவருந்தும் இடத்தில் கழிப்பறை உள்ளது. பக்தர்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. ஆடு, மாடுகள் பக்தர்களை உணவு அருந்த விடாமல் தொல்லை தருகின்றன.

இங்கு பக்தர்களுக்கு குடிநீர் வசதியும் இல்லை. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு பிளான்ட் செயல்பாடின்றி முடங்கியுள்ளது.பக்தர்கள் குடிநீருக்காக கடைகளுக்கு அலையும் பரிதாபம் உள்ளது. காசு கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்கி அருந்தும் நிலை உள்ளது. மழை, வெயில் நேரங்களில் ரோடுகளில் அமர்ந்து உணவருந்த முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர். பக்தர்கள் காலணிகளை வெளியே பாதுகாப்பற்ற நிலையில் விட்டு செல்லும் நிலை உள்ளது. காலணி பாதுகாப்பு கூடம் ஏதும் அமைக்கப்படவில்லை.

பக்தர்கள் இரவு நேரங்களில் வரும் போது போதுமான விளக்கு வசதி இல்லை.இருளில் அச்சத்துடன் பக்தர்கள் வரும் நிலை உள்ளது. கோடை விடுமுறை என்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந் நிலையில் கோயிலில் பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படாததால்,பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கோயில் நிர்வாகம் மக்களுக்கு குடி நீர் வழங்கவும். உணவு அருந்துவதற்கான ஷெட்டும் அமைத்து தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !