சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்
சேலம்: கோவிந்தா கோஷம் விண்ணதிர, கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், கடந்த, 10 காலை, சிறப்பு
திருமஞ்சனம், பூஜைக்கு பின், வைகாசி தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, வெள்ளி பல்லக்கு, மாலை, சிம்ம, ஹனுமந்த, சேஷ, வெள்ளி கருட,
யானை, புஷ்ப, குதிரை வாகனங்களில், திருவீதி உலா நடந்தது.
நேற்று மே, 19ல் காலை, ராஜகணபதி கோவில் அருகே, தேரோட்டம் தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து, பக்தர்களின், கோவிந்தா கோஷம் விண்ணதிர, முதல், இரண்டாம் அக்ரஹாரம், கடைவீதி வழியாக, தேர் நிலையை அடைந்தது.
சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் வரதராஜன், செயல் அலுவலர் குமரவேல் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதையொட்டி, கடை வீதியில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இன்று மே, 20ல் தீர்த்தவாரி உற்சவம், நாளை சத்தாபரணம், மே, 22ல் வசந்த உற்சவம் நடக்கிறது.