காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் செலவில் கோவில் குளம் சீரமைப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சி அநேக தங்காவதீஸ்வரர் கோவில் குளத்தை, அப்பகுதி தெருவாசிகள், தங்கள் சொந்த செலவில் சீரமைக்கின்றனர்.காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் மேட்டுத்தெருவில், சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல்பெற்ற ஸ்தலமான, கச்சி அநேக தங்காவதீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் அருகில் உள்ள தெப்பக்குளம், முறையான பராமரிப்பு இல்லாததால், செடி, கொடிகள் மண்டியும், மரங்கள் வளர்ந்தும் காடுபோல் கிடந்தது.இதனால், சிறுகுட்டையாக மாறி கிடக்கும் இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள், பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.எனவே, இக்குளத்தை, தங்கள் பங்களிப்புடன் தூர்வார, கைலாசநாதர் கோவில் மேட்டுத்தெரு, எஸ்.வி.என்., தெருவாசிகள் முடிவு செய்தனர். அதன்படி, இரு தெருவாசிகளும் ஒருங்கிணைந்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, தங்கள் சொந்த செலவில், பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியை துவக்கியுள்ளனர்.இதில், 170 அடி நீளம், 110 அடி அலகம் உள்ள இக்குளத்தை, 5 அடி ஆழத்திற்கு தூர் வாரப்படுகிறது. மேலும், மழைநீர் வரத்து கால்வாய்களும் சீரமைக்கப்பட உள்ளன என, தெருவாசிகள் தெரிவித்தனர்.