உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்கள் வைத்து முன்னோருக்கு வழிபாடு!

கற்கள் வைத்து முன்னோருக்கு வழிபாடு!

ஈரோடு: பவானி செரங்காட்டில், ஊரின் எல்லையில் கற்களை நட்டு வைத்து, அப்பகுதி மக்கள் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி வருகின்றனர். சுடுகாட்டில் வழிபாடு நடத்த இடவசதி இல்லாததால் இம்முறையை கடைபிடிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பவானி அருகே, செரங்காடு கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் இறந்தால், ஊரில் எல்லையில் உள்ள சுடுகாட்டில் புதைப்பது வழக்கம். ஆனால், இடப்பற்றாக்குறையால் புதைத்த உடலின் மீதே, மற்றவர்களின் உடலை புதைக்கும் அவலம், செரங்காட்டில் நிலவி வருகிறது.
சுடுகாட்டில் இடப்பற்றாக்குறையால், முன்னோர்களுக்கு வழிபாடு செய்வதிலும், செரங்காடு மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. சிக்கலை தீர்க்கும் விதத்தில், ஊர் எல்லையில் முன்னோர்களின் பெயர் பதித்த கல்வெட்டையும், பெரிய கற்களையும் வைத்து, செரங்காடு மக்கள் வழிபட்டு வருகின்றனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: செரங்காடு ஊர் எல்லையில் சுடுகாடு உள்ளதால், அங்கேயே இறந்தவர்களை புதைத்தும், எரித்தும் வருகிறோம். புதைக்கப்பட்ட இடத்தில் ஆண்டுதோறும் முன்னோர்களின் இறந்த தினத்திலும், அமாவாசையின் போதும், மலர்கள் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால், செரங்காடு சுடுகாட்டில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், ஏற்கனவே புதைத்த உடலை எடுத்த பின், மீண்டும் அதே இடத்தில் வேறு உடல் புதைக்கப்படுகிறது. சில சமயம், ஒரு உடலின் மீதே மற்றொரு உடலையும் புதைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே, ஊரின் எல்லையில் உள்ள முச்சந்திப்பில், கற்களையேத, கல்வெட்டையோ நட்டு வைத்து, ஆண்டுதோறும் மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் தினமும் வந்து, மலர்கள் வைத்து, வழிபட்டு செல்கின்றனர், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !