உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிக்கலில் வெங்கட்ராம சுவாமி சிலை

சிக்கலில் வெங்கட்ராம சுவாமி சிலை

ஓசூர் : தேன்கனிக்கோட்டை அருகே கிடைத்த, வெங்கட்ராம சுவாமி சிலை தொடர்பாக, அமைதிக் குழு கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், அந்தேவனப்பள்ளி அருகே உள்ள, வெங்கடாபுரம் கிராமத்தில், வெங்கட்ராம சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள நிலத்தில் இருந்து, கடந்த மாதம், பழமையான, வெங்கட்ராம சுவாமி சிலை, தோண்டி எடுக்கப்பட்டதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, தேன்கனிக்கோட்டை தாசில்தார், முத்துபாண்டி, டி.எஸ்.பி., சங்கீதா, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், வெங்கடாபுரம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கோவில் பூசாரி, முனியப்பா வீட்டில், ஊர் மக்கள் சார்பில், சுவாமி சிலைக்கு, பூஜை செய்யப்பட்டு வந்தன.

இதையடுத்து, மல்லிகார்ஜூன துர்க்கம் பகுதியில் உள்ள, சிவன் கோவிலில் பராமரிக்கப்படும் மற்ற சிலைகளுடன், வெங்கட்ராம சிலையை வைக்க, அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால், வெங்கடராபுரம் கிராம மக்கள், நாங்கள், பல ஆண்டுகளாக, வெங்கட்ராம சுவாமி சிலைக்கு, பூஜை செய்து வருகிறோம். புதிதாக கோவில் கட்டி, சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளோம். அதனால் சிலையை, ஒப்படைக்க முடியாது என்றனர். இதையடுத்து, தாசில்தார் முத்துபாண்டி தலைமையில், அமைதிக் குழு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அதிலும், அரசு அதிகாரிகளிடம், சிலையை ஒப்படைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இக்கூட்டத்தில் தீர்வு எட்டப்படாததால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !