உடுமலை திருப்பதி கோவில் சுவாமி சிலைகள் ஊர்வலம்
உடுமலை:உடுமலை திருப்பதி, ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் பிரதிஷ்டை செய்யப் படும், கொடிமரம் மற்றும் சுவாமி சிலைகள் ஊர்வலம் இன்று (ஜூன்., 6ல்) நடக்கிறது.
உடுமலை, தளி ரோடு, செங்குளம் அருகே, உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. முழுவதும் கற்கோவிலாக உருவாகி வரும்
இக்கோவிலின், மகா கும்பாபிஷேகம், ஜூலை, முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டு, திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது, பணி நிறைவடைந்துள்ள சன்னதிகளில், பிரதிஷ்டை செய்யப்பட உள்ள, மூலாலய சுவாமிகளின் சிலைகள் மற்றும் உற்சவர் சிலைகள் தயாராகியுள்ளது.இந்த சுவாமிகளின் திரு உருவச்சிலை மற்றும் கோவில் கொடிமரம் நகர வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்படும் கரிகோலம் நிகழ்ச்சி, இன்று (ஜூன்., 6ல்)நடக்கிறது.
பழநி ரோடு, எஸ்.வி.,மில் மைதானத்தில், மாலை, 3:30 மணிக்கு ஊர்வலம் துவங்குகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், கோவிலில் நிறுவப்பட உள்ள கொடிமரம், சுவாமிகளின்
திருஉருவச்சிலைகள், உற்சவர் சிலைகள், மங்கள இசைக்கருவிகள் முழங்க, 200 முளைப் பாரிகளுடன் ஊர்வலம் நடக்கிறது.இதில், பக்தர்களுடன், ரேணுகாதேவி பஜனைக்குழுவினர், கோவில்பட்டி கோலாட்டக்குழுவினர், கேத்தனூர் கும்மியாட்டக்குழுவினர், ராஜாவூர் தேவராட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து, நாளை (ஜூன்., 7ல்) முதல் வரும், 9ம் தேதி வரை, சுவாமிகளுக்கு, திருமஞ்சன ஜலாபிஷேகம், கோவில் வளாகத்தில் நடக்கிறது.இந்நிகழ்ச்சிகளில், பக்தர்கள் பங்கேற்று, எம்பெருமாள் அருள்பெறுமாறு, உடுமலை திருப்பதி பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள், திருப்பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்