அன்னூர் வீரமாசித்தியம்மனுக்கு கும்பாபிஷேக விழா
அன்னூர்:அழகேபாளையம், வீரமாசித்தியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூன்., 6ல்) நடந்தது.
குப்பனூர் ஊராட்சி, அழகேபாளையத்தில், பழமையான வீரமாசித்தியம்மன் கோவில் சிறியதாக இருந்தது. பக்தர்கள் முயற்சியால், புதிதாக ஆகம விதிப்படி கோவில் கட்டப்பட்டது. இத்துடன், விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்களுக்கும் திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் (ஜூன்., 5ல்) அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
காலையில், பக்தர்கள் பவானி, கூடுதுறை சென்று, தீர்த்தம் எடுத்து வந்தனர். மாலையில், மாரியம்மன் கோவிலிலிருந்து, தீர்த்தம் மற்றும் பாலிகை எடுத்து வரப்பட்டது. இரவில் முதல்கால பூஜை, கோபுர கலசம் வைத்தல், சுவாமி சிலை வைத்தல் நடந்தது.நேற்று (ஜூன்., 6ல்) காலை 8:00 மணிக்கு, சித்தி விநாயகர், மாரியம்மன், கோபுரம், விமான
கலசம் வீரமாசித்தியம்மனுக்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை
நடந்தது. 3,000 பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது.சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.