பெரியநாயக்கன்பாளையம் அருகே வித்யா கணபதி திருக்கோவில் கும்பாபிஷேகம்
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த தம்பு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வித்யா கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவுக்கு, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் தலைமை வகித்தனர். முதல் நாள் விழா திருவிளக்கு ஏற்றுதல், புனிதநீர் வழிபாடு, ஐம்பூத வழிபாடு ஆகியவற்றுடன் தொடங்கியது.
இரண்டாம் நாள் காலவேள்வி, திருமறை விண்ணப்பம் ஆகியவை நடந்தன. விழாவை யொட்டி, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், கோவிலை சுற்றி வலம் வந்த பின் கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், அன்னதானம் நடந்தது. வேள்வியை சக்திவேல், குழந்தை வேல் ஆகியோர் நடத்தினர். விழாவில், பள்ளி நிர்வாக அறங்காவலர் பாப்பாயம்மாள்,
தாளாளர் சித்ரா சம்பத்குமார், மேல் நிலைப்பள்ளி செயலாளர் ராஜ்மோகன், மழலையர் பள்ளி செயலாளர் அபர்ணா கார்த்திகேயன், தலைமை ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை தமிழ் ஆசிரியர் விவேகானந்தன் தொகுத்து வழங்கினார்.