பழநி உண்டியலில் போலி வெள்ளிப்பொருட்கள் பக்தர்களே உஷார்
பழநி: பழநி முருகன் கோயில் உண்டியலில் அதிகளவில் போலி வெள்ளிப் பொருட்கள் குவிகிறது.
பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக தங்கம், வெள்ளி பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இதனால் கிரிவீதி, அடிவாரப்பகுதியில் வியாபாரிகள் சிறிதளவு தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட குத்துவிளக்கு, வேல், சுவாமி சிலை, கால், தலை, உருவம், பாதம் மற்றும் டாலர்களை வெள்ளி, தங்கம் எனக்கூறி விற்கின்றனர்.
அவை விலை குறைவாக இருப்பதால் பக்தர்கள் வாங்கி ஏமாறுகின்றனர். இதனால் ஒவ்வொரு மாத உண்டியல் எண்ணிக்கையின் போதும், போலி தங்கம், வெள்ளிப் பொருட்கள் அதிகளவில் குவிகிறது. இவற்றை திரும்ப பயன்படுத்த முடியாததால் மூடைகளாக கட்டி வைக்கின்றனர். பக்தர்கள் விசாரித்து, கவனமாக தரமான தங்கம், வெள்ளியில் ஆன பொருள்தானா என சரி பார்த்து வாங்க வேண்டும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.