கருப்பசாமி கோவிலில் பறவைக்காவடி நேர்த்திக்கடன்
கமுதி: கமுதி அருகே கருப்பசாமி கோவில் வைகாசி களரி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கமுதி அருகே கூடக்குளத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் களரி திருவிழா நடத்தப்படும். இந்தாண்டும் கடந்த ஜூன் 11 ல், காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. இவ்விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி, அக்னி சட்டி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்று, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மழை பெய்யவும், நோய் நொடியின்றி வாழவும் பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி, பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் கூடக்குளம், போத்தநதி, மண்டலமானிக்கம், எழுவனுார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கூடக்குளம் பொதுமக்கள், இளைஞரணியினர் செய்தனர்.