திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேரோட்ம்
சென்னை : திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடந்து வரும், நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவத்தின் பிரதான விழாவான நேற்று, தேர் திருவிழா நடந்தது.
ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் தெள்ளிய சிங்கர் மாடவீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்ம சுவாமிக்கு, ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், ஜூன், 13ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஜூன், 15ம் தேதி, கருட சேவை உற்சவம் நடந்தது.பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான நேற்று, தேர் திருவிழா நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, உற்சவர் தெள்ளிய சிங்கர், பூதேவி, ஸ்ரீதேவி நாச்சியாருக்கு, சர்வ அலங்காரம் நடந்தது. இதை தொடர்ந்து, தேரில் எழுந்தருளினர்.மாலை, 4:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம்பிடிக்கப்பட்டது. மாடவீதிகளை தேரில் வலம் வந்த தெள்ளியசிங்கர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு, தோட்டத் திருமஞ்சனம் நடந்தது.இன்று லட்சுமி நரசிம்மன் கோலத்தில் பல்லக்கு உற்சவமும், நாளை தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது. ஜூன் 22ம் தேதியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.