12ம் நூற்றாண்டு கோவில் புதுப்பிக்கப்படுமா?
உளுந்தூர்பேட்டை :ஆதனூரில் பல ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் கோவிலை திறக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உளுந்தூர்பேட்டை அடுத்த ஆதனூரில் 12ம் நூற்றாண்டு காலத்தில் கோப்பெருஞ்சோழன் மன்னனால் அழகிரி வெங்கடேச பெருமாள் கோவில், அபிதா குஜலாம்பாள் அருணாசலேஸ்வரர் கோவில், சவுந்தவள்ளி அம்மன் கோவில் ஆகியவை நிறுவப்பட்டன. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் தினசரி பூஜைகள் செய்வதற்காக 100க்கும் மேற்பட்ட நிலங்கள், கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ரூபாய் வருவாய் இருந்தும் கோவிலுக்கு கிடைப்பதில்லை. பழமை வாய்ந்த இக்கோவில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. இந்து அறநிலையத்துறையினர் கோவிலை பராமரிக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோவில்கள் பராமரிப்பின்றியும், தினசரி பூஜைகள் ஏதுமின்றி பக்தர்களின் வருகை தடைபட்டது. இதனால் கோவில் சிலைகள் சிதலமடைந்தும், கோபுர கலசங்கள் இன்றியும், சிதைந்தும் காணப்படுகின்றன. பழமை வாய்ந்த சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோவில் கதவுகள் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. நேற்று முன்தினம் ஆதனூரில் நடந்த இலவச பொருட்கள் வழங்கும் விழாவிற்கு குமரகுரு எம். எல்.ஏ., சென்றிருந்தார். அப்போது கோவிலுக்கு சென்று குமரகுரு எம்.எல். ஏ., வழிபட்டார். அவரிடம் கோவிலை பராமரிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கோவில் பூசாரி சுப்மணியன் கேட்டுக் கொண்டார். பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ள கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் எம்.எல்.ஏ., விடம் வலியுறுத்தினர்.