ஆடி பூஜை நிறைவு: சபரிமலையில் நடை அடைப்பு
சபரிமலை: சபரிமலையில் ஆடி மாத பூஜைகள், ஜூலை, 17ல் துவங்கின. தினமும் உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், பட பூஜை ஆகியவை நடந்தன. நேற்று மதியம், களபாபிஷேகத்துக்கு முன், சகஸ்ரகலசாபிஷேகம் நடந்தது. சபரிமலையில், ஜூலை, 18 முதல், நேற்று வரையிலும் பலத்த மழை பெய்தது. பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனினும், நேற்றும், நேற்று முன்தினமும் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
பக்தர்கள், மழையில் நனைந்த படி, நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு அத்தாழ பூஜைக்கு பின், நடை அடைக்கப்பட்டது. இனி நிறைபுத்தரிசி பூஜைக்காக, ஆக., 6ம் தேதி நடை திறக்கப்படும். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆக., 7ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறந்த பின், அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து நெய்யபிஷேகம் நடக்கும். தந்திரி கண்டரரு, நெற்கதிர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்துகிறார்; பின் அவற்றை மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி தலையில் சுமந்து, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து, கோவிலுக்குள் எடுத்துச் செல்வார். அங்கு பூஜைகளுக்கு பின், நெற்கதிர்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அன்று இரவு, 7:00 மணிக்கு, படிபூஜை, 9:00 மணிக்கு, அத்தாழ பூஜை முடிந்து, இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின், ஆவணி மாத பூஜைகளுக்காக, ஆக., 16ம் தேதி நடை திறக்கப்படும்.