திருத்தணி முருகனுக்கு ஆடி பரணியில், 1.50 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருத்தணி: முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடிப்பரணியில், 1.50 லட்சம் பக்தர்கள், ஆறு மணி நேரம் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா, நேற்று முன்தினம் (ஜூலை., 24ல்), ஆடி அஸ்வினியுடன் துவங்கியது.நேற்று, (ஜூலை., 25ல்),ஆடிப்பரணியை முன்னிட்டு, அதிகாலை, 3:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.ஆடிப்பரணி என்பதால், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், வாகனங்களில் திருத்தணிக்கு வந்தனர்.
பின், சரவணபொய்கை மற்றும் நல்லாங்குளம் ஆகிய இடங்களில், பக்தர்கள் புனித நீராடி, மலர், மயில், பால் மற்றும் பன்னீர் காவடிகளுடன், மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசித்தனர்.நேற்று முன்தினம் (ஜூலை., 24ல்), இரவு முதல், நேற்று (ஜூலை., 25ல்), இரவு வரை, 1.50 லட்சம் பக்தர்கள், ஆறு மணி நேரம் பொது வழியில் காத்திருந்து, மூலவரை தரிசித் தனர். மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், மலைப்படிகள் வழியாக, சரவண பொய்கைக்கு வந்து, குளத்தை ஒருமுறை வலம் வந்து, மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றடைந்தார்.எஸ்.பி., அரவிந்தன் தலைமையில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.
பக்தர்கள் நெரிசலை தவிர்க்கும் வண்ணம், திருத்தணி நகருக்குள் நுழைய, வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ’பாஸ்’ ஒட்டப்பட்டுஇருந்த வாகனங்கள் மட்டும், நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. மலைக் கோவிலுக்கு, இருசக்கர வாகனங்களில் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.மலைக்கோவில் சித்த மருத்துவ அறையில், இலவச மருத்துவ முகாம், 24 மணி நேரம் நடந்தது. இதுதவிர, பீரகுப்பம் வட்டார மருத்துவமனை சார்பில், நகரில், ஐந்து இடங்களில்,மருத்துவ முகாம் நடந்தது.