ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருடசேவை
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உற்ஸவத்தின் ஐந்தாம்நாள் இரவில் ஐந்து கருடசேவைநடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 10:05 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் முகப்பு மண்டபத்தில் பெரியாழ்வார் எழுந்தருள, ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள், கருட வாகனங்களில் காட்டழகர் சுந்தரராஜபெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகிய பெருமாள்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தருளினர்.
தொடர்ந்து ஐந்து கருடசேவை நடந்தது. மாடவீதிகள், ரதவீதிகள் வழியாக எழுந்தருளிய பெருமாள்களை திரளான பக்தர்கள் வழிநெடுக காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலுக்கு பெருமாள்கள் வந்தடைந்தனர். அங்கு மங்களாசாசனம், பெருமாள்கள் வழி அனுப்புதல் நடந்தன. சடகோப ராமானுஜ ஜீயர், தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள் ஸ்ரீவாரிமுத்து, வாசுதேவன், ரகு, பாலாஜி, தேவராஜ், வேதபிரான் அனந்தராமன், சுதர்சன், அரையர் முகுந்தன், வெங்கடஷே், ஸ்தானிகம் ரமஷே், கிருஷ்ணன், மணியம் கோபி மற்றும் ஸ்ரீராம் பங்கேற்றனர். ஆடிப்பூர விழாவின் ஏழாம் நாளான இன்று (ஆக. 2) இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன்கோயிலில் ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனத்திருக்கோல வைபவம் நடக்கிறது.