உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் விழாவில் ஆயிரக்கணக்கில் கிடாக்கள் நேர்த்திக்கடன்

கோயில் விழாவில் ஆயிரக்கணக்கில் கிடாக்கள் நேர்த்திக்கடன்

விராலிப்பட்டி கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிடாக்கள் நேர்த்திக்கடனாக  வழங்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இவ்விழாவில் விடிய விடிய கிடாக்கள் வெட்டப்பட்டு  பிரசாதம் வழங்கப்பட்டது.

விராலிப்பட்டியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை யில் கோட்டை கருப்பணசாமி கோவில் விழா கொண்டாடப்படுகிறது. விவசாய பாதிப்பு மற்றும் நோய் நொடியின்றி வாழ சுற்றுப்புற கிராமத்தினர் இக்கோயிலுக்கு கிடாக்களை நேர்த்திக்கடனாக வழங்குவர். ஆண்டு முழுதும் பெறப்பட்ட கிடாக்கள் திருவிழா நாளில் கருப்பண்ணசாமிக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக அன்று வரும் பக்தர்களுக்கு இரவு முழுவ தும் வழங்கப்படும். இந்தாண்டு விழாவில் நேற்று (ஆக., 2ல்) இரவு 10:00 மணிக்கு மேல் கோயில் பெட்டி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பூஜை நடந்தது. பின் கண்மாய் கரையோரம் உள்ள கோட்டை கருப்பணசாமி கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆகாச பூஜை நடந்தது.

தொடர்ந்து கிடாக்கள் வெட்டப்பட்டு அதிகாலை 3:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் பணி துவங்கியது. சூரிய உதயத்திற்கு முன்பாக பிரசாதம் வழங்கியதும் திருவிழா நிறைவடைந்தது.

ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் புனிதா தலைமையில் செயலாளர் சந்திரசேகர், ஆய்வாளர் பாலமுருகன் எழுத்தர் ராஜா செய்திருந்தனர். நிலக்கோட்டை சப் டிவிஷன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதுரை திருச்சி திண்டுக்கல் கரூர் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

வத்தலக்குண்டு, பெரியகுளம் டிப்போக்களில் இருந்து விராலிப்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் இரவு முழுவதும் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !