மதுரையில் நிறைவு பெற்றது வைகை பெருவிழா
மதுரை: மதுரையில் ஆரத்தி வழிபாட்டுடன் வைகை பெருவிழா நேற்று நிறைவு பெற்றது. மதுரை வைகைக்கரை புட்டுத்தோப்பு மைதானத்தில் ஜூலை 24ல் துவங்கியது. அகில பாரதிய துறவியர் மாநாடு, பெண் துறவியர் மாநாடு, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ மாநாடு, சிவனடியார் மாநாடு, பசுவின பாதுகாப்பு மாநாடு, நதிநீர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் மாநாடு, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாளான நேற்று இரவு ஆரத்தி வழிபாடு நடந்தது. இதையொட்டி வைகை நதி மற்றும் அங்கு அமைக்கப்பட்டு இருந்த கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி நதிகளின் தீர்த்தக் கிணறுக்கு தீபாராதனை நடந்தது.
ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தினர் செய்திருந்தனர். ஆரத்தி வழிபாட்டில் பங்கேற்ற அமைச்சர் செல்லுார் ராஜூ கூறுகையில், ‘வைகை நதியை காக்கும் வகையில் நடந்த இவ்விழா வெற்றி பெற்றுள்ளது. ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்க திட்டம் தயாரித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும். வைகைக்குள் குப்பை சேராத வண்ணம் இரு கரைகளிலும் 5 கி.மீ., நீளம் பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. வேலுார் லோக்சபா இடைத்தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க., வெற்றி பெறும்’ என்றார்.