சின்னாளபட்டி கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு
சின்னாளபட்டி: ஆடிப்பூரத்தை முன்னிட்டு சின்னாளபட்டி சமயபுரம் மாரியம்மனுக்கு, சீர்வரிசை ஊர்வலம், 9 வகை சாத படையலுடன் வளைகாப்பு நடந்தது. திரு.வி.க.நகர் சமயபுரம் மாரியம்மன் கோயில், ஆடிப்பூர விழா அபிஷேகத்துடன் துவங்கியது. குங்குமம், பச்சரிசி, மஞ்சள்கிழங்கு, மஞ்சள் புடவை, வளையல், வாழை, மாம்பழம், சப்போட்டோ, கொய்யா, பேரீட்சை உள்ளிட்ட பழங்கள், கற்கண்டு, எண்ணெய் பதார்த்த சீர்வரிசைகளுடன் ஊர்வலம் நடந்தது.
அம்மனுக்கு சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், தக்காளி, தயிர், எலுமிச்சை, புளியோதரை, தேங்காய் போன்ற 9 வகை சாதங்கள் படையலிடப்பட்டது. ஆராதனைகளுடன், அம்மனுக்கு வளையல் பூட்டுதல் நடந்தது. கர்ப்பிணிகளுக்கு சந்தனம் பூசி வளையல் அணிவித்து குருக்கள் இளையராஜா வளைகாப்பை துவக்கினார். கீழக்கோட்டை மாரியம்மன் கோயில், தேவி கருமாரியம்மன் புற்றுக்கோயிலில், அபிஷேக, ஆராதனைகளுடன் வளைகாப்பு விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் வளையல் அணிந்து, வழிபட்டனர்.