திருவொற்றியூர் வடிவுடையம்மன் வளைகாப்பு
திருவொற்றியூர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வடிவுடையம்மன், அகிலாண்டேஸ்வரி, பொன்னி அம்மனுக்கு வளைகாப்பு ஊஞ்சல் உற்சவம் நிகழ்வு, விமரிசையாக நடந்தது.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில் பிரசித்திப் பெற்றது. ஆண்டு தோறும் ஆடி மாதம், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வடிவுடையம்மன் உற்சவ தாயாருக்கு, வளைகாப்பு நிகழ்வு சிறப்பாக நடக்கும்.
அதன்படி, நேற்று முன்தினம் (ஆக., 4ல்) இரவு, வசந்த மண்டபம் முழுவதும், வண்ண கண்ணாடி வளையல்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.சிறப்பு மலர் அலங்காரத்தில், உற்சவ தாயார், மண்டபத்தின் ஊஞ்சலில் எழுந்தருளினார். 16 வகையான முளை கட்டிய பயிறுகள், உணவு பண்டங்களை துணியில் கட்டி, வயிற்றில் கட்டினர்.
மங்கல வாத்தியங்கள் இசைக்க, வேதமந்திரங்கள் முழங்க, வண்ண கண்ணாடி வளையல்கள் அணிவித்து, வளைகாப்பு நிகழ்வு நடந்தது.அப்போது, கூடியிருந்த பக்தர்கள், ’ஓம் சக்தி... பராசக்தி’ என, பக்தி பரவசம் அடைந்தனர். நிறைவாக ஊஞ்சல் சேவை நடந்தது. பக்தர்களுக்கு, வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.கோவில் கருவறை மண்டபமும், வண்ண கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. விழாவில், கோவில் உதவி கமிஷனர், சித்ரா தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சன்னிதி தெருவில் உள்ள, அகத்தீஸ் வரர் - அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கும்; ஜீவன்லால் நகரில் உள்ள, பொன்னியம்மனுக்கும், ஆடிப்பூர வளைகாப்பு ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.