அரகண்டநல்லூர் அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் விழா
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் புத்தமாரியம்மன், முத்துமாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா நடந்தது. அரகண்டநல்லூர் தரைப்பாலம் அருகில் உள்ள பழமையான முத்துமாரியம்மனுக்கு சாகை வார்த்தல் விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாகை வார்த்தல் நடந்தது. அதேபோல் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் உள்ள முத்துமாரியம்மனுக்கும் சேர்த்து ஒருசேர விழா எடுக்கப்பட்டது.
காலை 9:00 மணிக்கு புத்துமாரியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. புத்துமாரியம்மன் மீனாட்சி அலங்காரத்திலும், முத்துமாரி அம்மன் அன்னபூரணி அலங்காரத்திலும் காட்சி அளித்தனர். மதியம் 12:00 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்தி கரகம் புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. இதில் பெண்கள் கூல் குடம் எடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். 1:40 மணிக்கு அம்மனுக்கு கூழ் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.