பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா துவக்கம்
திருநெல்வேலி :பாளை. வேதநாராயணர், அழகியமன்னார் ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக துவங்கியது. பாளை. நகரின் மையப்பகுதியில் ஸ்ரீமந் நாராயணன் வேதவல்லி, குமுதவல்லி சமேதராக வேதநாராயணன் என்ற பெயரில் அருள் பாலித்து வருகிறார். நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகிய மன்னாராக, உற்சவர் ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபாலராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்து வருகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் கோயில் நிர்வாகம், பாப்புலர் சுந்தரம் பிள்ளை அறக்கட்டளை, பக்தர்கள் குழு சார்பில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடக்கும். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு ராஜகோபால சுவாமி, அழகியமன்னார் வீதியுலா நடந்தது. 11 நாட்கள் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வாகன பவனி நடக்கிறது.
ஏப்ரல் 6ல்தேரோட்டம்: 10ம்திருநாள் ஏப்ரல் 6ம்தேதி காலை 6 முதல் 7 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர். இரவு தவழ்ந்த கிருஷ்ணன் கோலத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 11ம்திருநாள் மதியம் 12 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா, இரவு சப்தாவர்ணம், சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், அறக்கட்டளை பாலசுப்பிரமணியன், தக்கார் வெள்ளைச்சாமி, பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.