உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகோபால ஸ்வாமி கோவிலில் தேரோட்ட திருவிழா கோலாகலம்

ராஜகோபால ஸ்வாமி கோவிலில் தேரோட்ட திருவிழா கோலாகலம்

மன்னார்குடி: தமிழகத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில் 12 மாதங்களும் திருவிழா காணும் கோவிலில் ஒன்றாக மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவில் திகழ்கிறது. வைணவ ஸ்தலங்களில் ஒரு தேரோட்டமும், ஒரு தெப்ப உற்சவமும் நடப்பது வழக்கம். ஆனால் இந்த கோவிலில் இரண்டு தேரோட்டமும், இரண்டு தெப்ப உற்சவமும் நடத்தப்படுவது வெகு சிறப்பாகும். இதில், பங்குனியில் நடப்பது பெருமாள் ஸ்வாமிக்கு நடக்கும் தேரோட்டமாகும். ஆடி மாதத்தில் செங்கமலத்தயாருக்கு என, தனித்தேரோட்ட விழா நடக்கிறது. பங்குனி தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்றுக்காலையில் ஏழு மணியளவில் ஸ்ரீ வித்ய ராஜகோபாலனுக்கு கல்யாண திருக்கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, ருக்குமணி, சத்யபாமாவுடன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, பக்தர்கள் அனைவரும் தேரில் அர்ச்சனை செய்து ஸ்ரீ வித்ய ராஜகோபாலனை வணங்கி வழிபட்டனர். நேற்று மதியம் இரண்டு மணியளவில் "வடம்பிடித்தால் வளம் பெறலாம் என்னும் ஐதீக அடிப்படையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். ஏற்பாட்டை தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்ரேஷன் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மன்னார்குடி டி.எஸ்.பி அன்பழகன், இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் தலைமையில் போலீஸார் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !