சாரங்கபாணி ஸ்வாமி கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் கொடியேற்றம்!
கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர பிரம்மோத்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைணவத்தலங்களில் மூன்றாவது தலமாக திகழும் இக்கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோத்சவ விழா நேற்று தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகள் நடந்தன. இதையடுத்து நேற்று காலை 11 மணியளவில் கோவில் கொடி மரத்தில் கருட கொடி ஏற்றினர். இரவு தங்க மங்களகிரியில் தாயார் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (29ம் தேதி) முதல் 2ம் தேதி வரை காலை நேரங்களில் பல்லக்கிலும், இரவு கண்ணாடி கமலம் மற்றும் வெள்ளியிலான வாகனங்களிலும் புறப்பாடு நடைபெற உள்ளது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 5ம் தேதி வெள்ளி ரதத்தில் தாயார் உள் பிரகார புறப்பாடும், மாலை 6 மணியளவில் சைத்ரோத்சவ திருத்தேருக்கான பந்தக்கால் முகூர்த்தமும், 7ம் தேதி திருக்கல்யாண மகோத்சவமும் நடைபெற உள்ளது.