உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேத நாராயண சுவாமி கோவிலில் சூரிய பூஜை!

வேத நாராயண சுவாமி கோவிலில் சூரிய பூஜை!

ஊத்துக்கோட்டை :நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோவிலில் நடைபெற்ற, ஐந்து நாட்கள் சூரிய பூஜை விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். மகா விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து, கடல் அடியில் பல ஆண்டுகளாக அசுரனுடன் யுத்தம் புரிந்தார். அதனால், அவரது உடல் மிகவும் குளிர்ச்சியடைந்தது. அப்போது அவரது உடல் வெப்பமடைவதற்காக, சூரிய பகவான் தன் ஒளிக் கதிர்களை அவரது உடலில் விழும்படி செய்கிறார். இது சூரிய பூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. ஊத்துக்கோட்டை அடுத்த, நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதத்தில் சில நாட்கள் மூலவர் நாராயணன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகிறது. இவ்விழா கடந்த, 23ம் தேதி துவங்கி, ஐந்து நாட்கள் நடந்தது. துவக்க நாள் மற்றும் அடுத்த நாள், 24ம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர் மீது சூரிய ஒளி: மேற்கு திசையை பார்த்து நிற்கும் நாராயணன் மீது, 25ம் தேதி பாதங்களிலும், இரண்டாம் நாள் 26ம் தேதி நாபியிலும் (வயிறு), மூன்றாம் நாள், 27ம் தேதி சுவாமியின் சிரசிலும் (தலை) சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்தன. ராஜகோபுரத்தில் இருந்து, 600 அடி தூரத்தில் இருக்கும் மூலவர் மீது சூரிய ஒளிக் கதிர்கள் விழுந்த திவ்யரூப தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.தெப்ப உற்சவம் கடந்த 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. முதல் நாளில் சீதா சமேத ராமச்சந்திர சுவாமியும், அடுத்த இரு நாட்கள் வேதவல்லி சமேத வேத நாராயண சுவாமியும் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இவ்விழாவை காண ஆந்திரா, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !