நாமக்கல் நரசிம்ம கோவில் தேர் திருவிழா; கொடியேற்றத்துடன் துவக்கம்!
நாமக்கல்: நாமக்கல் நரசிம்ம ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் முன்புறம் உள்ள மலைக்கோட்டையின் ஒருபுறம், நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. மற்றொரு புறம், ரங்கநாதர் சன்னதி அமைந்துள்ளது. இவ்விரு கோவில்களும், குடவறைக் கோவில்களாகும். இக்கோவில்களில், ஆண்டுதோறும் மார்ச் மாதம், பங்குனி தேர்த் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு விழா 28ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை 10.45 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டது. அதையடுத்து, ஏப்ரல் 3ம் தேதி வரை, நாள்தோறும் காலை 10 மணிக்கு திருமஞ்சனம், பல்லக்கு புறப்பாடு, பகல் 1 மணிக்கு ஸ்நபன திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு அன்னம், சிம்மம், அனுமந்தம், கருடன், சேஷ, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஏப்ரல் 4ம் தேதி காலை பல்லக்கு, இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.தொடர்ந்து, மொய் சமர்ப்பிக்கப்படுகிறது. ஏப்ரல் 6ம் தேதி காலை 8.45 மணிக்கு கோட்டை நரசிம்மர் திருத்தேர் வடம்பிடித்தல், மாலை 4.45 மணிக்கு ரங்கநாதர் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல் 7ம் தேதி காலை 10 மணிக்கு, திருமஞ்சனம், தீர்த்தவாரி, பல்லக்கு புறப்பாடும், இரவு 7 மணிக்கு சத்தாவரணம், கஜலட்சுமி வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலா, வாண வேடிக்கையும் நடக்கிறது. ஏப்ரல் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை காலை, மாலை திருமஞ்சனம், புஷ்பயாகம், வசந்த உற்சவம், விடையாற்றி உற்சவம், புஷ்ப பல்லக்கு, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.