உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி விநாயகர் சிலை வைக்க உள்ளாட்சி அமைப்பின் அனுமதி தேவை

புதுச்சேரி விநாயகர் சிலை வைக்க உள்ளாட்சி அமைப்பின் அனுமதி தேவை

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்திக்கு சிலை அமைக்க விரும்புவோர், உள்ளாட்சி  மற்றும் போலீசில் அனுமதி பெற வேண்டும் என விழா பாதுகாப்பு தொடர்பாக  கலெக்டர் தலைமை யில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு  செய்யப்பட்டது.

எதிர்வரும் 2ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை  பாதுகாப்பாகவும், அமைதி யாகவும், சுற்றுச்சூழல்கேடு விளைவிக்காத வகையில்  கொண்டாட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து கலெக்டர்  தலைமையில் நேற்று 21ம் தேதி ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், சீனியர் எஸ்.பி., ராகுல்அல்வால், சப் கலெக்டர்கள், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், மின்துறை செயற்பொறியாளர்கள், மாசுகட்டுப்பாடு கமிட்டி முதுநிலை பொறியாளர் ரமேஷ், இந்து அறநிலையத்துறை ஆணையர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஏழுமலை மற்றும் வருவாய் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், விநாயகர் சிலை அமைக்க விரும்புவோர் உள்ளாட்சி அமைப்பு மற்றும் போலீசில் உரிய அனுமதி பெற வேண்டும்.களிமண்ணால் செய்த, சுடப்படாத, ரசாயன கலப்பற்ற சிலைகள், கிழங்குமாவு கழிவுகளால் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் பாதிக்காத சிலைகளை மட்டுமே நிறுவ வேண்டும். சிலைகளுக்கு நீரில் கரையும், எவ்வித தீங்கும் விளைவிக்காத இயற்கை வண்ணங்களை மட்டுமே தீட்ட வேண்டும்.

இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் மக்களுக்கு விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.விநாயகர் சிலைகள் நிறுவும் இடங்களில் அமைக்கப்படும் கூடாரங்கள், பாதுகாப்பான எளிதில் தீப்பிடிக்காத  உபகரணங்களால் மட்டுமே அமைக்க வேண்டும்.

விழாவிற்கு மின்கம்பங்களில்  இருந்து இணைப்பு எடுக்கக்கூடாது. மாணவர்கள் மற்றும் முதியோர்களின் நலன்  கருதி, அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துவதை தவிர்க்க  வேண்டும்.குறித்த நேரத்திற்கு மேல் ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது.  

இதனை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுப்பர்.விநாயகர் சிலையை  கரைப்பதற்கு ஊர்வலமாக செல்ல போலீசாரால் நிர்ணயித்த நேரம் மற்றும்  தடத்தில் மதுபான கடைகளை மூடவும், ஊர்வலம் மற்றும் சிலை கரைக்கும்  நிகழ்ச்சி மாலை 6:00 மணிக்குள் முடிக்கவும், ஊர்வலத்தில் குந்தகம்  விளைவிப்போர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவும், ஊர்வலத்தின்போது  பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !