இடியும் நிலையில் ’வில்லுண்டி தீர்த்தம்’
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடலில் ராமர் உருவாக்கிய வில்லுண்டி தீர்த்த கிணறு தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் பீதியில் செல்கின்றனர்.ராமாயணத்தில், ’இலங்கையில் இருந்து சீதையை மீட்ட ராமர் ராமேஸ்வரம் வந்த போது, சீதைக்கு தாகம் எடுத்தது. உடனே ராமபிரான், வில்லில் அம்பு எய்து கடலில் துளைத்ததும் நல்ல நீர் பீறிட்டு வந்தது. இதனை சீதை உள்ளிட்ட அனைவரும் பருகி தாகம் தணித்தனர்’ என கூறப்படுகிறது. ராமர் வில் அம்பில் உருவாக்கிய இத்தீர்த்தத்திற்கு ’வில்லுண்டி தீர்த்தம்’ என பெயரிட்டனர்.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கிராம கடற்கரையில் அமைந்துள்ள இத்தீர்த்த கிணறுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று பருகுகின்றனர்.சேதம்கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு 50 லட்சம் ரூபாயில் கடற்கரையில் இருந்து 50 மீட்டர் துாரத்தில் இத்தீர்த்தத்திற்கு கடலில் தடுப்பு சுவருடன் பாலமும், கான்கிரீட் உறையும் அமைத்தனர். ஆனால் தற்போது தடுப்பு சுவர், கான்கிரீட் உறை அடிப்பகுதி அரித்து சேதமடைந்து, இடியும் தருவாயில் உள்ளது.இதனால் பக்தர்கள் காலபோக்கில் இத் தீர்த்தம் அழியும் அபாயம் உள்ளது. எனவே தடுப்பு சுவர், கான்கிரீட் உறையை மராமத்து செய்து புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.