உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழகத்தில் முதல் முதலாக, 1.5 டன் எடையில் பெரிய ஆலய மணி!

தமிழகத்தில் முதல் முதலாக, 1.5 டன் எடையில் பெரிய ஆலய மணி!

ஈரோடு: தமிழகத்தில் முதல் முதலாக, 1.5 டன் எடையில், மிகப் பெரிய ஆலய மணி, திருச்சி கோவிலுக்காக, ஈரோட்டில் தயாராகி வருகிறது.திருச்சி மாவட்டம், தென்னூரில், உக்கிர காளியம்மன் கோவில் புகழ் பெற்றது. அக்கோவிலில் தமிழகத்திலேயே, 1.5 டன் எடையில், ஆலய மணி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஈரோடு அருகே கரூர் பை-பாஸ் சாலையில் உள்ள இடிசியா இண்டஸ்டரியல் எஸ்டேட்டில் உள்ள, சிற்பி ராதாகிருஷ்ணன் ஸ்தபதியிடம், "ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மணி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

ஸ்தபதி ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்திலேயே இவ்வளவு பெரிய ஆலயமணி கிடையாது. தாமிரம், வெண்கலத்தால், இந்த மணி தயாரிக்கப்படுகிறது. ஆறு அடி உயரத்தில், 1.5 டன் எடை கொண்டதாக இது அமையும். இதன் சத்தம், 10 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்கும். இந்த மணி தயாரிக்க, முதலில் கட்டையில் மாடல் தயாரிக்கப்படுகிறது. அதன்மேல், கயிறு சுற்றி, கடுக்காய் கலந்த மண் கொண்டு பூசப்படுகிறது. அந்த அச்சில் மெழுகு ஊற்றப்பட்டு, அதன் மேல் மீண்டும் மண் கலவை பூசப்படுகிறது. அதன்பிறகு, மண்ணாலான ஆலய மணியை சூடு படுத்தும்போது, அதனுள் உள்ள மெழுகு உருகி, துவாரத்தின் வழியே வெளிவந்து விடும். அதில், தாமிரம், வெள்ளீயம் கலந்த வெண்கலம் கலவை காய்ச்சப்பட்டு, துவாரம் வழியே ஊற்றப்படும். நன்றாக குளிர்ந்த பிறகு, மண்ணைத் தட்டி எடுத்தால், பிரமாண்டமான மணி உருவாகி இருக்கும். "டச் அப் வேலைகள் பூர்த்தியானவுடன், பளபளப்பான ஆலய மணி தயாராகி விடும். உலக அளவில், 100 டன் எடையுள்ள மணி கூட இருக்கிறது. ஆனால், தமிழக அளவில் இங்கு தயாராகும் ஆலய மணி தான் மிகப்பெரியது எனக் கூறலாம். இந்த மணி, திருச்சி அருகே தென்னூரில் உள்ள உக்கிர காளியம்மன் கோவிலுக்குத் தயாராகிறது. இன்னும் இரண்டு மாதத்தில், மணி முழுமையாக தயாராகிவிடும். மணி தயாரிக்க, பத்து லட்சம் ரூபாய் செலவாகிறது. மேலும், கோவையில் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் டிரஸ்ட் சார்பில், அன்னபூரணி கோவிலுக்காக கிருஷ்ணன், ராதா ஸ்வாமி சிலைகள் செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட இந்தச் சிலை, தங்கத்தில் தயாரிக்கப்பட்டது போலவே காணப்படும். 100 ஆண்டுகளானாலும், தங்கமுலாம் அப்படியே இருக்கும். இரண்டு அடி உயரத்தில், தாமிரத்தில் இச்சிலைகள் வடிக்கப்படுகின்றன. அதில் பாதரசம் பூசப்பட்டு, அதன்மேல், 24 காரட் தங்கமுலாம் பூசப்படுகிறது. இரண்டு சிலை தயாரிக்க ஏழு லட்ச ரூபாய் செலவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்வம் காட்டாத தொழிலாளர்: சிற்ப கூடத்தில் பணியாற்ற, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரில் இருந்து தான் ஆட்கள் வரவழைக்கப்படுகின்றனர். ஈரோட்டில் ஒருவர் கூட முன்வரவில்லை என்கிறார், ஸ்தபதி ராதாகிருஷ்ணன். அவர் கூறியதாவது: ஈரோட்டில் சிற்ப கூடம் ஆரம்பித்ததில் இருந்து, சிற்ப தொழிலை கற்றுக் கொள்ள, இதுவரை யாரும் முன்வரவில்லை. இக்கலைகள் மறைந்து விடக்கூடாது. கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் வந்தால், இருப்பிடம், உணவு இலவசமாக வழங்கப்படும். தொழில் கற்றுக் கொள்ள ஆரம்பித்த சிறிது காலத்துக்கு பிறகு மாத ஊதியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !