சதுர்த்தி விழா: அன்னதானம் வழங்கிய முஸ்லிம்கள்
சென்னை: மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவில், முஸ்லிம்கள் அன்னதானம் வழங்கி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வண்ணாரப்பேட்டை, எம்.எஸ்.கே., குழு சார்பில், ஆறாவது ஆண்டாக, வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையில், 11 அடி உயரத்தில், விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது. இதில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி சார்பில், அதன் நிறுவன தலைவர், வி.எம்.எஸ்.முஸ்தபா, 35, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விநாயகர் சிலையை திறந்து வைத்து, வழிபாட்டில் பங்கேற்றார். அக்கட்சி சார்பில், நேற்று மதியம், 1:00 மணி முதல், விநாயகர் சிலைக்கு முன், புளியோதரை, பிரிஞ்சி சாதம், கேசரி உள்ளிட்ட உணவுகளுடன், 500 பேருக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், வண்ணாரப்பேட்டை, சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.