திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் அருகே குப்பை அகற்ற நடவடிக்கை தேவை
திண்டிவனம்:திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் எதிரே குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும், நகராட்சி சார்பில் தினமும், லாரிகள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு, சலவாதி சுடுகாடு அருகே உள்ள குப்பைகளை தரம் பிரித்து, உரம் தயாரிக்கும் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
நகராட்சி சார்பில் குப்பைகளை தினந்தோறும் அகற்றி வந்தாலும், பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் விட்டு விடுவதால், அந்த இடங்களில் மலை போல் குவிந்து விடுகின்றன. இதே போல், திண்டிவனத்தில் பிரசித்து பெற்ற திந்திரணீஸ்வரர் கோவில் அருகே கொட்டப் படும் குப்பைகள் நகராட்சி சார்பில் அகற்றப்படுவதில்லை.
கோவிலுக்கு வரும் வழியில் மலைபோல் குப்பை குவிந்துள்ளதால் அப்பகுதியில் உள்ளவர் களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அதே இடத்தில் மீண்டும் மீண்டும் குப்பைகள் கொட்டப்பட்டு வருதால், பொது மக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திந்திரணீஸ்வரர் கோவில் அருகே குவிந்துள்ள குப்பைகளை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.