வரும் 5ம் தேதி ஆத்தூர் சோமநாத சுவாமி கோயில் தேரோட்டம்!
ஆத்தூர் : ஆத்தூர் சோமநாதசுவாமி கோயிலில் வரும் 5ம் தேதி தேரோட்டம் நடக்கவுள்ள நிலையில் இரவு, பகலாக அங்கு தேர் பராமரிப்பு பணி நடக்கிறது. ஆத்தூர் சோமநாதசுவாமி கோயிலில் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் சுவாமி எழுந்தருளல், சுவாமி அம்பாள் திருவீதி உலா, அபிஷேக அலங்கார ஆராதனை மற்றும் இரவில் சமய சொற்பொழிவுகளும், கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. பத்தாம் திருவிழாவான வரும் 5ம் தேதி காலை 5.30 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனையும், 8 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தலும், இரவு 8 மணிக்கு தெப்பத்திருவிழாவும், சுவாமி இடப வாகன உலாவும் நடக்கிறது. திருவிழா அன்று தேரோட்டம் நடக்கவிருப்பதால் கோயில் தேரை சுத்தம் செய்து பராமரித்து அலங்கரிக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்வரன், தக்கார் சரவணபவன் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.